நாட்டுப்புற ஆய்வு

மனுநீதிச்சோழன்

பெரும்பாலான தமிழர்கள் நன்கறிந்த ஒரு புராணக்கதை ‘மனுநீதிச் சோழன் கதை’. தன் மகன் செலுத்திய தேரில் பசுவின கன்று ஒன்று அடிபட்டு இறந்து போக அப்பசுவின் துயர்போக்கும் முகமாக, தன் மகனைத் தேர்க்காலில் இட்டு தேரைச் செலுத்தி நீதி வழங்கிய சோழமன்னன் ஒருவனை இப்புராணக்கதை குறிப்பிடுகிறது.

இக்கதையின் முழுவடிவம் பிற்காலச் சோழர்காலத்தில் உருவான பெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத்தொண்டர் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நூலின் தொடக்கப் பகுதியில் திருவாரூர் நகரில் சிறப்பைக் கூறும்போது மனுநீதிச்சோழன் கதை. திருவாரூர் நகரில் நடந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இக்கதையில் இடம்பெறும் மன்னன் யார் என்பதைச் சேக்கிழார் தெளிவாகச் சுட்டவில்லை. அவர் காலத்தில் ஆட்சிபுரிந்த அநாபயச் சோழன் (இரண்டாம் குலோத்துங்கச் சோழன் 1133 – 1146) என்ற சோழ மன்னனின் முன்னோன் என்று அவன் குறிப்பிடப்படுகிறான்.

சேக்கிழாருக்கு முன்பே பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய ‘பழமொழி நானூறு’. சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் மனுநீதிச் சோழனின் கதை இடம்பெற்றுள்ளது.

‘கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்நதான்’ என்று பழமொழி நானூறு (93) இக்கதையைக் குறிப்பிடுகிறது. தான் பிறந்த வளர்ந்த சோழ நாட்டின் நீதிநெறி வழுவாச் சிறப்பை, பாண்டிய மன்னனிடம் எடுத்துரைக்கும் போது

‘வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணியுகுநீர்நெஞ்சுசுடத் தான்தன்

அரும் பெற்ற புதல்வனை ஆழியின் மடித்தோன்’

என்று கண்ணகி கூறுகிறாள் (சிலப் 20; 53 – 55). ‘கறவை முறை செய்தோன் (சிலப் 23 : 58) கறவை முறை செய்து காவலன் (சிலப் 29 : 20) என்றும் இந்நிகழ்வை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் இச்செய்திகள் சோழமன்னர்களின் நீதிநெறி வழுவாத்தன்மையின் அடையாளமாக அமைகின்றன.

இதே நோக்கில் சோழ மன்னர்களின் புகழ்பாடும் இராசராசசோழன் உலா, குலோத்துங்கச் சோழன் உலா, விக்கிரமச் சோழன் உலா ஆகியன மனுநீதிச் சோழன் கதையைக் குறிப்பிடுகின்றன.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்

என்று மன்னனின் ‘செங்கோன்மை’ சிறப்பைக் கூறும் குறளுக்கு (547) உரை எழுதிய பரிமேலழகர் ‘மகனை முறை செய்தான் கண்ணும்’ என்று குறிப்பிடுகிறார். கற்றுவல்லாரிடையே இக்கதை பரவலாக அறிமுகமாயிருந்ததை இவையெல்லாம் உணர்த்துகின்றன.

* * * * *

பின்வரும் இயற்கை பிறழ்ந்த நிகழ்வுகள் இக்கதையில் இடம்பெற்றுள்ளன.

  1. பசு மற்றும் கன்றின் வடிவில் விண்ணுலகத் தேவர்கள் வந்தமை
  2. கன்றை இழந்த பசு ஆராய்ச்சி மணியை அடித்தது.
  3. தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்த கன்றும், இளவரசனும் உயிர் பெற்று எழல்.

இந்நிகழ்வுகளை ஒருபுறம் ஒதுக்கிட்டு இக்கதையில் இடம்பெறும் சோழ மன்னன் உண்மையில் வரலாற்றில் இடம்பெற்ற மன்னனா? என்பதை ஆராய்வோம். பெரிய புராணத்தை அதன் மூலத்திலிருந்து விலகாது உரைநடையில் எழுதிய தி. பட்டுசாமி ஓதுவார் (2005; XIII) மனுநீதிச் சோழன் என்ற தலைப்பில்

“இவன், ஏழரான் (ஏழ் 10 ஆரன்ளூ ஏழு மாலைகளை அணிந்தவன்ளூ அல்லது ஏழு அரசரை வென்று சூடிய ஏழு மாலைகளையுடையவன்) என்னும் பெயர் உடையவன்ளூ கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இலங்கை மீது படையெடுத்து அசேலன் என்பவனை வெற்றி பெற்றவன்.”

என்ற குறிப்பை எழுதியுள்ளார். ஆனால் இச்செய்திக்குச் சான்று எதையும் அவர் காட்டவில்லை. நீல கண்ட சாஸ்திரியார் ‘சோழர்கள்’ என்ற தமது நூலில் (1989 ளூ 10) ‘புராண மன்னர்கள்’ என்ற உட்தலைப்பில்

“ஒரு பசுக்கன்று தன் தேர்ச் சக்கரத்தில் சிக்கி இறக்கச் செய்த தன்
மகனுக்கு மரண தண்டனை விதித்த மனுநீதிச் சோழன் . . . . . . .”

என்று குறிப்பிடுகிறார். மனுநீதிச் சோழனை புராண மன்னர்களுள் ஒருவனாகவே அவர் கருதுகிறார்;. இது ஏற்புடைத்தே என்பதில் ஐயமில்லை.

மனுநீதிச் சோழன் கதை, காலம் தோறும் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இது புராணக்கதைகளின் இயல்பாகும். பழமொழி நானூறு, சிலப்பதிகாரம், பரிமேலழகர் உரை ஆகியனவற்றுள் சோழமன்னன் என்றே பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெரிய புராணத்தில் ‘மனுநீதிச் சோழன்’ என்று குறிப்பிடப்படுகிறான்.

இப்புராணக் கதை நிகழ்ந்த இடமாகத் திருவாரூர் குறிப்பிடப்படுகிறது. மேலும் முந்தைய நூல்களில் சுருக்கமாகக் கூறப்பட்டிருப்பதற்கு மாறாக இக்கதையை விரிவாகக் கூறிச் செல்கிறது.

இனி இப்புராணக் கதையின் தோற்றம் குறித்கு ஆராய்வோம். இந்திய மன்னர்களுக்கும் புரான இதிகாசங்களுக்கும் இடையிலான உறவை ரொமிலா தாபப்பார் (2006; 173 விளக்கும் போது; அதிகாரம் மற்றும் ஆற்றல் வாய்ந்த கற்பனையான புராணக்கதை மாந்தர்களுடன் சத்திரியர்கள் தம்மை இணைத்துக் கொண்டு தம் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டனர் என்று குறிப்பிடுகிறார்.

இக்கருத்தின் அடிப்படையில் நோக்கினால், சோழ மன்னர்களின் நீதிநெறி வழுவாத் தன்மையின் அடையாளமாக மனுநீதிச் சோழன் என்பவன் உருவாக்கப்பட்டுள்ளான் என்பது புலனாகும்.

தொடக்கத்தில் பெயர் சுட்டப்படாத இம்மன்னன் சேக்கிழாரால் மனுநீதிச் சோழன் என ஏன் அழைக்கப்பட்டான் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. சோழர் ஆட்சிக்காலத்தி;ல் அரசநீதியாக மனுநீதி விளங்கியது. இதை சோழர்கால மெய்கீர்த்திகள் வாயிலாக அறியலாம்.

‘மனுவாறு விளங்க’, ‘மனுநெறி’, ‘மனுவொழுக்கம்’ என்ற சொல்லாட்சி சோழர்கால மெய்கீர்த்திகளில் பரவலாக இடம்பெற்றுள்ளது.

மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் பதினொன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் (தெ.இ.க III பகுதி 1, 2; 86, 87) மெய்கீர்த்தியாக

மனு நீதி முறை வளர
மனு நீதி தழைத்தோங்க

என்ற தொடர்கள் இடம்பெற்றுள்ளன. சோழர் ஆட்சிக்கு முன்பு ‘மனுநெறி அனைத்தும் மாறி’ சோழ நாடு காட்சியளித்ததாக கலிங்கத்துப்பரணி குறிப்பிடப்படுகிறது. தம் அரச நீதியாக மனுநீதியை ஏற்றுக்கொண்ட சோழ மன்னர்கள் அதன் சிறப்பைக் குடிமக்களிடம் கொண்டு செல்ல விரும்பியுள்ளார்கள். பெயரறியா சோழ மன்னனை மையமாகக் கொண்ட புராணக் கதையை இதற்காக உருவாக்கிக் கொண்டார்கள். இதன் விளைவாக மனுநீதிச்சோழன் என்ற கற்பனையான மன்னன் உருவாக்கப்பட்டான்.

இரண்டாம் குலோத்துங்கச்சோழனின் அமைச்சராக இருந்த சேக்கிழார் இக்கதை நிகழ்ந்த இடமாகத் திருவாரூரைக் குறிப்பிட்டு, அதை ஆண்டு வந்த மன்னனாக மனுநீதிச் சோழன் என்பவனைக் குறிப்பிடுகிறார். இதன் வாயிலாகத் தான் பணிபுரிந்து வந்த இரண்டாம் குலோத்துங்கனின், கற்பனை முன்னோன் ஒருவனுக்கு ஊரும் பெயரும் இட்டு ஒரு தெளிவான அடையாளத்தை அவர் வழங்கியுள்ளார். இதன்பின் சோழ மன்னர்களின் புராண மூதாதையாக (mythical ancestor) மனுநீதிச்சோழன் நிலைத்துவிட்டான்.

திருவாரூர் தியாகராயர் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் வடக்குச் சுவரில் உள்ள விக்கிரமச் சோழன் கல்வெட்டில் (தெ.இ.க. 5; 456) மனுநீதிச் சோழன் கதை இடம்பெற்றுள்ளது. இக்கதையில் மனுநீதிச் சோழனின் அமைச்சனது பெயர், இங்கணாட்டு பாலையூருடையான் உபயகுலாமவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இக்கதையில் இடம்பெறும் அமைச்சனுக்கு ஒரு தெளிவான அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. சேக்கிழார் காலத்துக்குப் பிந்தைய கல்வெட்டு இது.

சோழர் காலக் கோவில் சிற்பங்களில் மனுநீதிச் சோழன் கதை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

செஙகல்பட்டு மாவட்டம் மப்பேடு கிராமத்து சிவன் கோவிலிலும், தஞ்சை மாவட்ட கடம்பவனேசுவரர் கோவிலிலும் மனுநீதிச் சோழன் கதைத் தொடர்பான சிற்பங்கள் உள்ளன (தகவல்: முனைவர் வெ. வேதாச்சலம், கல்வெட்டாய்வாளர்).

சோழர்கிள்ன புராண மூதாதை என்ற நிலையிலிருந்து தமிழர்கள் அனைவரின் புராண மூதாதை என்ற மாற்றம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் போது உருவானது. அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு நாட்டில் ஆளுவோருக்கு எதிராகத் தம் வரலாற்றுப் பண்பாட்டு அடையாளஙகளைத் தேடியெடுப்பது உலகெங்கிலும் காணப்படும் பொதுவான நிகழ்வு. இம் மரபை ஒத்ததாக வள்ளலார் எழுதிய சிறுநூல் ஒன்று அமைகிறது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் அடிவருடிகளான ஜமின்தார்களின் கொடுர ஆட்சியும் இங்கிலாந்து நாட்டின் நீதி வழங்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டு அதைப் புரிந்து கொள்ள இயலாத நிலையும் 19 ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் நிலவியது. இத்தகைய மோசமான சமுகச் சூழலில், மனுநீதிச் சோழனின் வரலாற்றை சேக்கிழாரைத் தழுவி ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற சிறுநூலை 1854 ஆம் ஆண்டில் வள்ளலார் அச்சிட்டு வெளியிட்டார். தன் மகனுக்கே உயிர்த்தண்டனை வழங்கிய மன்னனைக் குறித்து எளிய உரைநடையில் எழுதிய இச்சிறுநூல் சராசரிக் கல்வியறிவுடைய தமிழர்களிடமும்; சென்றடைந்தது.

மனுநீதிச் சோழன் முற்பிறவியில், தான் செய்த பாவங்களாக சிலவற்றைப் பட்டியலிடுகிறான். இது எளிய செய்யுள் நடையில் அமைந்துள்ளது. இச்செய்யுளில் சமுகக் குற்றங்களாக அவர் குறிப்பிடுவனவற்றுள் சில வருமாறு:

‘குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித் தேனோ!
கல்லும் நெல்லுங் கலந்து விற்றேனோ!’

ஒரு புராணக் கதையை முன் வைத்து அவர் கால சமுகக் கொடுமைகளாக அவர் கருதுவனவற்றை புராணப் பாத்திரத்தின் கூற்றாக வெளிப்படுத்துகிறார். இது மட்டுமின்றி மனுதர்மம் குறித்த அவரது விமர்சனத்தையும் இச்சிறுநூலில் முன்வைக்கிறார். அமைச்சன் ஒருவன் மனுநீதிச் சோழனை நோக்கி

“அரசனோ! உமது பெயரினால் விளங்கும் மனுநூலிற் குடுமியையும் முகரோமத்தையும் சவரஞ் செய்து, தான் கொன்ற பசுத்தோலைப் போர்த்துப் பசுமந்தையினிடத்தில் வாசஞ் செய்து, கோசலத்தினால் ஸ்நானம் பண்ணி, இநதிரியங்களை யடக்கியிருத்தல், கஞ்சி குடித்தல், அவிசு பண்ணி உண்டல், பட்டினியிருத்தல், பசுமந்தையினுடன் போதல், பசுக்களுக்கு உபகாரஞ் செய்தல், பசுத்தானஞ் செய்தல் முதலான செய்கைகளைப் பசுக்கொலை செய்தோர்க்குப் பிராயச் சித்தமாகச் செய்விக்க வேண்டுமென்று விதித்திருக்கின்றதேளூ அதற்கு மாறாகப் புதல்வனைக் கொலை செய்வீரானால் விதிமாறாட்டமென்னுங் குற்றம் வருவதாகத் தோன்றுகின்றதே.”

என்று கூறுகிறான். அதற்கு சோழ மன்னன்

“அந்த மனுநூல் அநித்தியமாகிய தேகத்தில் அபிமானமும். அசுத்தமாகிய பிரபஞச போகத்தில் ஆசையும் வைத்த காமிகளுக்கே அவ்விதி கூறியதல்லது நித்தியமாகிய சிவத்தில் அபிமானமும், சுத்தமாகிய சிவபோகத்திலாசையும் வைத்த என் பிதா மூதாதை முதலானவர்களுக்குக் கூறியதல்ல.”

என்று விடைபகர்கிறான். மனுநீதிச் சோழன் என்ற பெயரை மட்டுமே வள்ளலார் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் ஆரியக் கலப்பற்ற தமிழ்ச்சமுகத்தின் புராண மூதாதையாகவே அவனை அடையாளம் காட்ட விரும்பியுள்ளார் என்பதும் தெளிவாகிறது. இவ்வாறு சோழ மன்னர் பரம்பரையின் புராண மூதாதை, தமிழர்கள் அனைவரின் புராண மூதாதையாக மாற்றப்பட்டுவிட்டான். தமிழ் நீதிமுறையின் சீரிய அடையாளமாக மனுநீதிச் சோழன் கதை வரலாறு போல் நிலைத்துவிட்டது.

இதன் தொடர்ச்சியாகவே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இடம் பெற்றுள்ள மனுநீதிச் சோழன் சிற்பம் அமைந்துள்ளது.

*

மனுதர்ம சாஸ்திரத்தின் பன்னிரெண்டாம் அதிகாரத்தில் 109 முதல் 117 முடிய உள்ள சுலோகங்களின் சுருக்கமாகவே இப்பகுதியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *